Thursday, February 19, 2009

ஈழத்தின் நிலை மாறாதா?

ஈழத்தின் அவலநிலைமாறாதா?

வாயைத்திறந்து சொல்ல முடியவில்லை என்றாலும், எங்கள் வலியை உணரமுடிகிறதா உங்களால்?


உடைமாற்றிக்கொள்ள அல்ல இந்த அழுகை...


கண்ணை இழந்தாலும் நம்பிக்கை இழக்கவில்லை.
இலங்கையில் என்னதான் நடக்கிறது? என்று கேள்விக் கேட்பவர்கள் இங்கு சென்று அந்த கோரத்தை பார்க்கலாம். மனதை திடப்படுத்திக்கொண்டு செல்லவும். stop-the-vanni-genocide.blogspot.com, puthinam.com

Friday, February 13, 2009

காதலர் தினம் கொண்டாடப்போகிறீர்களா?


காதலர் தினம் கொண்டாடுவது ஒன்றும் பெரிதில்லை. எத்தனை காதலர்கள் வாழ்க்கையில் இணைகிறார்கள்.அப்படியும் இணைந்த காதலர்கள் எத்தனைபேர் ஒழுங்காக வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பது கேள்விக்குறிதான்.
எனக்குத் தெரிந்த ஒருவர் காதலிக்கும் போது அந்த காதலிக்காக உருகு உருகென்று உருகினார். அந்தப் பெண்ணை ஒருநாள் பார்க்காவிட்டாலும் சாப்பிட மாட்டார். ஆனால், பெற்றோரை சம்மதிக்க வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை, பதிவு திருணம் செய்துகொள்ளவும் தைரியமில்லை. அந்தப்பெண்ணை மறந்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டுவிட்டார். அந்தப் பெண்ணும் வேறொரு ஆடவணை திருமணம் செய்து கொண்டு விட்டார்.(அந்தப் பெண் அவருக்காக நிறைய நாட்கள் காத்திருந்தாள் என்பது உண்மை.)
அடுத்து மற்றொரு நண்பர். இவரும்கூட அந்தப் பெண்ணை விழுந்து விழுந்து காதலித்தார். அந்தப் பெண்ணையே இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார். அப்புறம் என்ன என்கிறீர்களா? அவர்கள் வாழ்க்கையின் போக்குதான் சரியில்லை.(இத்தனைக்கும் அந்த நண்பருக்கு வருமானத்திற்கு குறைவில்லை.) இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்வது, அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது, இருவரும், பிறந்த வீட்டுக்கு(தனிகுடித்தனம் இருக்கிறார்கள்) அடிக்கடி செல்வது இப்படியே போகிறது அவர்கள் வாழ்க்கை. இவர்கள் காதலித்தது குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள். இந்த ஐந்து வருடங்களில் ஒருவரையொருவர் புரிந்துகொண்டதுதான் என்ன?
எங்கள் குடும்பத்தில் பெரும்பாலோர் காதல் திருமணங்கள்தான் செய்திருக்கிறோம்.(நான் உட்பட) எங்களுக்குள் சிற்சில சண்டைகள் வரும். அதுவெல்லாம் சில மணித்துளிகள்தான் நீடிக்கும். பிறகு சமாதானமாகிவிடுவோம். பின்பு அந்த சண்டையையே வைத்து கிண்டல்கூட பண்ணிக்கொள்வோம். காதலித்தோ, பெற்றோர் பார்த்து வைத்த திருமணமோ எதுவானாலும் ஒருவரையொருவர் புரிந்து வாழ்ந்தால்தான் அந்த வாழ்க்கை இனிக்கும். விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்தான் வாழ்க்கை.காதல் திருமணம் செய்வோர் எல்லோரும் காலமெல்லாம் காதலுடன் வாழ்க.

Sunday, February 8, 2009

பதினைந்து நாளில் ஏதாவது அதிசயம் நடந்தால்தான் உண்டு- ஈழத்தமிழரர் அகிலனின் ஏக்கம்.


பதிவர்கள் சார்பாக ஈழத்தமிழருக்காக தன்னுயிர் ஈந்த முத்துக்குமரனுக்கு அஞ்சலிக்கூட்டம் தி்ட்டமிட்டபடி சென்னை தியாகராயர் நகர், நடேசன் பூங்காவில் நடைபெற்றது. சரியான நேரத்திற்கே கூட்டம் ஆரம்பித்ததே இந்த நிகழ்வின்போதுதான் என்றபோதே நமது வலைப்பதிவர்களின் உணர்வினை புரிந்துகொள்ள முடிந்தது.
பதிவர்களின் அறிமுகத்திற்கு பிறகு ஒருவர் பேசினார்.(அனைவரின் பெயரை தவிர்க்கிறேன்.) ஈழத்தமிழருக்கான தமிழ் மக்களின் உணர்வுகளையும், பத்திரிகையாளர் சிலரின் போக்கையும் விலக்கிவிட்டு, இதற்காக நம்மால் செய்ய முடிந்தது எல்லாம் காங்கிரஸை புறக்கணிப்பதே, அதற்கு மாற்றாக பி.ஜே.பி. ஆதரிக்க வேண்டும் என்றார்.

அவர் கருத்துக்கு அனைவருமே பி.ஜே.பி.யால் மட்டும் என்ன செய்ய முடியும் என்றபோது, நமது எதிர்ப்பை காட்டத்தான் அவ்வாறு செய்யச் சொன்னேன் என்றார். மற்றபடி அனைவரும் ஒரே மாதிரிதான் அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற கருத்தே மேலாங்கியது.
வைகோ சிறப்பாக செயல்படுவதாக ஒருவர் குறிப்பிட்டபோது, அவரின் உழைப்பு விழலுக்கு இரைத்த நீராகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. காரணம், அ.தி.மு.க. கூட்டணியில் அவர் இருப்பதே. அவர் அக்கூட்டணியை விட்டு விலகி, ராமதாஸ், திருமா, தா.பாண்டியன் போன்றோர் கூட்டணி வைத்தால் நல்லது என்ற கருத்தும் பரவலாக இருந்ததை அறிய முடிந்தது.

அடுத்து பேசியவர் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் அகிலன். அவர் ஈழ நிலையை விளக்கிய போது அவையில் கனத்த மெளனம் நிலவியது. முஸ்லிம்கள் நாளைக்கு ஐந்து தடவை தொழுகை செய்கிறார்களோ இல்லையோ, நான் ஐந்து முறை இன்டர் நெட்டுக்குச் சென்று, ஈழத்தில் வாழும் எனது அம்மா, தம்பி, தங்கைகளின் பெயர் பலியானோர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வருகிறேன் என்றவர், முத்துக்குமரன் போன்றோர் தீக்குளிப்பது தமிழர்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இரு்ககலாம். ஆனால் அதனால் ஆவப்போவது என்ன என்று கேள்வி எழுப்பினார். ராஜபக்சேவின் முடிவில் அவர் தீவிரமாகவே இருப்பதாகவும், இன்னும் பத்து அல்லது பதினைந்து நாட்களில் ஒரு முடிவுக்கு வந்துவிடும் நிலையிலதான் இப்போது ஈழம் இருக்கிறது. அதற்குள் ஏதும் அதிசயம் நடந்தால்தான் உண்டு என்றபோது, அனைவரும் பேசத்திரணியற்று இருந்தனர்.

இந்திராகாந்தி,ராஜீவ் காந்தி போன்றோருக்கு செருப்பு மாலை போடப்பட்டது சம்பந்தமாக பேச்சு வந்தபோது, இதுவரை அவர்களை நாம் அனைவரும் மதித்தே வந்திருக்கிறோம். ஆனால் இன்றைய காங்கிரஸின் போக்கின்மீது உள்ள வெறுப்பின் வெளிபாடாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். தவிர, அந்த தலைவர்களை அவமதிப்பதை நாமும் கண்டிக்கிறோம் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

தொடரும் தீக்குளிப்பையும் கண்டிக்கப்பட்டது.ஈழத்தமிழருக்கா நம்மால் என்ன செய்ய முடியும் என்று விவாதிக்கப்பட்டது. பேரணி, ஆர்பாட்டம், துண்டறிக்கை வெளியிடுவது என்றெல்லாம் அலோசனைகளுக்குப் பின் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் இருக்கமே நிலவியது.
வந்திருந்த வாசகர் ஒருவர், இலங்கைப் பிரச்சனையில் இன்னும் பலருக்கு தெளிவில்லாமலே இருப்பதாக தெரிவித்தார். உழைக்கப் போன இடத்தில் தனிநாடு கேட்கலாமா என்ற கேள்வி பலருக்கும் இருப்பதாக தெரிவித்தவர், அதைப்பற்றி பதிவு எழுதுங்கள், முத்துக்குமரனின் இறுதி அறிக்கையை அனைவருக்கும் கொண்டு சேருங்கள் என்றார். அப்போது ஒருவர்(பெங்களூர் பதிவர்) வருகிற ஞாயிறு(15.2.2009) அன்று பெங்களூரில் ஆர்பாட்டமும், துண்டறிக்கைகள் வெளியிடுவதும் செய்யப்போவதாகவும், துண்டறிக்கைகள் கன்னடம்,ஆங்கிலத்திலே இருக்குமாறு செய்யப்பட்டுள்ளது.(தமிழில் இருந்தால் கன்னடர்கள் இந்த விசயத்தில் வேறு விதமாக எண்ணக்கூடும் என்பதால்) என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, மற்ற மொழி தெரிந்தவர்களும் அந்தந்த மொழிகளில் மொழிபெயர்த்து அனைத்து மொழிமக்களிடமும் இவ்விசயத்தை கொண்டு செல்ல வேண்டுமென்று தீர்மானமாகத் தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக ஈழத்திற்காக தீக்குளித்த தமிழர்களுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு கனத்த இதயங்களுடன் கலைய மனமில்லாமல் ஆங்காங்கே நின்று மீண்டும் மீண்டும் பலரும் பேசிக்கொண்டிருந்தனர்.

Monday, February 2, 2009

லஞ்சத்தை ஒழிக்க த.அ.உ.ச



தமிழ்நாட்டில் மட்டும் லஞ்ச, ஊழல்களுக்கு எதிராக 200 மேற்பட்ட இயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் பல இயக்கங்கள் அவர்களுக்கு வரும் அச்சுறுத்தல் காரணமாக செயல்படவில்லை என்பதே உண்மை.
2007 ஆம் ஆண்டில் மட்டும் 133 லஞ்ச, ஊழல் வழக்குகள் போடப்பட்டுள்ளனவாம். 2008ல் 226 வழங்குகள். ஆண்டுக்கு ஆண்டு வழக்குகள் அதிகரித்துவருகின்றன.
இதைப் மேம்போக்காகப் பார்க்கும்போது லஞ்ச, ஊழல் அதிகரித்து வருகிறார்போல் தோன்றுகிறது. ஆனால் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதால்தான் அதிக வழக்குகளும் அதிகரித்துள்ளன என்பது நிதர்சனமாகும்.
இந்திய அளவில் லஞ்ச பெறுவதில் நெம்பர் ஒண்ணாக இருப்பது பீகார் மாநிலமாம். நமது தமிழ்நாடு ஒன்பதாவது இடத்தில் உள்ளதாம். மாநில அரசு துறைகளில் முன்னணி வகிப்பது வருவாய்துறையாம். அதற்கடுத்து போக்குவரத்து துறை, பத்திரப்பதிவுத்துறை... இப்படி போகிறதாம். பொதுமக்களின் நண்பன் என்று சொல்-க் கொள்ளும் காவல்துறை ஏழாம் இடத்தைப் பிடித்திருக்கிறதாம். இப்போதெல்லாம் நூறு, இருநூறு என்பதெல்லாம் மலையேறிவிட்டன. லட்சக்கணக்கில் லஞ்சம் பெரும் நிலை உண்டாகிவிட்டது.
சென்னை நகரங்களில் சில குறிப்பிட்ட காவல் நிலையங்களில் பணியாற்ற பயங்கரப் போட்டியே நடைபெறுகிறதாம். எல்லாம் மாமுலான விஷயங்களுக்குத்தான் என்கிறது தகவல் வட்டாரம்.
லஞ்சத்திற்கு எதிராக போராடும் அனைத்து அமைப்புகளும் ஒன்றாக இணைந்து ஒரே கூட்டமைப்பாகப் போராட வேண்டும் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு முன்னால் கமிஷனர் என்.விட்டல் கூறியிருந்தார். அதைக்கவனத்தில் கொண்டு இந்திய ஊழல் ஒழிப்புபோர் கூட்டமைப்பு (அலுவலகம் 55, ரயில்வே பார்டர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை-33) 'மாறுங்கள் மாற்றுங்கள்' என்ற தலைப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு வரும் 19.2.2009 அன்று பயிற்சி வழங்க உள்ளார்கள். இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். தொலை பேசி எண்கள்: 64569900, 9710979797)
லஞ்சம், ஊழலை ஒழிக்க தகவல் அறியும் உரிமை சட்டம் மிகுந்த பலனளிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். இச்சட்டத்தின்மூலம் அரசின் திட்டங்கள் பற்றிய விவரங்கள் வெளிப்படையாக தெரியவரும்போது லஞ்சத்தின் வீரியம் குறையும். ஆனாலும் மத்தியில் 18 துறைகளை பற்றி நாம் கேள்வி ஏதும் கேட்க முடியாது என்று அறிவித்திருக்கிறது. இதுவே தமிழ்நாட்டில் 33 துறைகள் என்றிருக்கிறது. இவற்றை குறைத்தால் லஞ்சம், ஊழலும் குறையும் வாய்ப்பு அதிகரிக்கும்.
எல்லாவற்றையும்விட பொதுமக்களின் விழிப்புணர்வு அதிகரிப்பதுதான் விடியலுக்கான முதற்படியாக இருக்கும். லஞ்சமில்லா நாளைய உலகம் நம் கையில்!