Monday, March 30, 2009

கவிதை


நமக்குள் உண்டான
பிணக்குகளில்
பிடிபடுகிறது
உன்னைப்பற்றிய
புரிதல்!


****************

உன் காதலி எப்படி?

கேட்பவர்களுக்கு
எப்படி சொல்வேன்...

உவமைகளுக்குள்
அடங்கமறுக்கும்
உன்னை!

Friday, March 27, 2009

மழை... மழை.... மழை...


அபூர்வமானதுதான்
மழையும்
அவளின் தீண்டலும்

***********

மழைக்கால
காளான்கள்
அவளின் நினைவுகள்

*********

மழைக்காலம்
இதமாய் இருக்கிறது
அவளின் நினைவுகள்

*********

மழைக்கண்டு சலிப்பு
தாகம் தீர்க்கும்
தண்ணீர் பாட்டில்!

***********

மழையில் நனையும் குழந்தை
தடுக்க முடியவில்லை
ஒழுகும் குடிசை

Wednesday, March 25, 2009

ஊடல் பொழுதுகள்...



பனிவிழும் இரவு
நீளும் நிசப்தத்தை
தின்று தீர்க்கி்ன்றன
தகிக்கும் நினைவுகள்

கனத்த மெளனத்தை
கலைத்துப்போடும்
தெருநாய்கள்

உறக்கம் துறந்த
விழிகளில்
தொக்கிநிற்கும்
ஊடல் பொழுதுகள்!

Tuesday, March 24, 2009

இது அய்க்கூ மாதிரி.

இது அய்க்கூ மாதிரி.(நல்லா கவனிங்க...இது அய்க்கூ மாதிரிதான். மாதிரி அய்க்கூ அல்ல...)

ஊர்மரியாதை யாருக்கு
சச்சரவில் சிறைவைப்பு
கோவிலுக்குள் சிலைகள்

***********

நள்ளிரவில்
வியர்வை குளியல்
மின்தடை

************

சாலையோரம்
நிழல்தரும்
அடிக்குமாடி

*********

காதல் தோல்வி
கெளரவம் கிடைத்தது
கவிஞன்

*********

அகராதிகள் பலபடித்தும்
அர்த்தம் புரியவில்லை
காதல்

**********

Monday, March 23, 2009

அய்க்கூ கவிதைகள்


அந்தி சரியச் சரிய
தென்படுகின்றன
புதிய முகங்கள்
**************

சூரியனாய் பிரகாசிக்கும்
பெண்ணின் சுதந்திரம்
மேற்குமுட்டும்வரை
**************

பழம்தின்று பசியாறிய
பறவையறியாது
எச்சத்தின் மதிப்பு
**************

எங்கோ தூரத்தில்
கேட்கிறது
ஒற்றைக் குயிலோசை

Thursday, March 19, 2009

ஸ்... யாரும் சிரிக்கக்கூடாது.

கலைஞர் : மூன்றாவது அணி மூன்றாவது கண் போன்றது.

ஜெயலலிதா : மூன்றாவது கண் என்பது சிவபெருமானின் நெற்றி்க்கண்ணை குறிக்கும். நெற்றிக்கண் மூடியிருக்கும் வரைதான் தவறு செய்வோருக்கு பாதுகாப்பு. நெற்றிக்கண்ணை திறந்துவிட்டால், எதிரேயுள்ளவர்கள் எரிந்து சாம்பலாகிப்போவார்கள்.

கலைஞர் : மூன்றாவது கண்ணை பெரியார் வழியில் வந்தவர்கள் யாரும் நம்பமாட்டார்கள்.

இல.கணேசன்: தி.மு.க.வுடனோ, அ.தி.மு.க.வுடனோ விஜய்காந்த் கூட்டணி வைத்தால் அவரது தனித்தன்மையை இழந்துவிடுவார்.தனித்து நின்றால் வாக்கு வங்கியை குறைந்துவிடும். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி என்றால் மட்டுமே இரண்டையும் காப்பாற்ற முடியும்.

நல்லக்கண்ணு: அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் 7 தொகுதிகளை கேட்டுள்ளோம்.

Monday, March 2, 2009

வழக்கொழிந்த சொற்கள் (மீட்பு)

வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள் பற்றி பலரும் வலைதளத்தில் எழுதிவருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக மூன்றுபேரை எழுதச் சொல்லும் முறையால் பல அரியாத, அறியத்தவறிய தமிழ்ச் சொற்களை மீண்டும் நம் பார்வைக்கு கிடைக்கிறது. அந்த வகையில் என்னை எழுதச் சொன்ன நைஜீரியா ராகவன், மற்றும் தேவா அவர்களின் வேண்டுகோளின்படி எனக்கு தெரிந்த சில சொற்களை உங்களுக்காக...
ஊடல் - அன்பால் இணைந்திருந்தவர்களிடையே ஏற்படும் சிறு இடைவெளி.
கூடல் - அன்பால் இணைந்திருத்தல்.
ஊதக்காற்று - குளிர்நிறைந்த காற்று.
நிரல் - வரிசை
பஞ்சணை - பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கை.
சரடு - கிணற்றில் நீர் இறைக்க உருளும் உருளை.
சல்லடை - மாவு, அரிசி போன்ற பொருட்களை சலிக்க உபயோகப்படும் பொருள்.
அந்தி - மாலைப் பொழுது.
பஞ்சாரம் - கோழி குஞ்சு பொரித்தபிறகு அடைத்து வைக்கும் கூடை.
பத்தாயம் (குதிர்) - நெல் மணிகளை சேமித்து வைக்க பயன்படும். இது மரத்தினாலும், மண்ணாலும் செய்யப்பட்டிருக்கும்.
உவகை - மகிழ்ச்சி, இன்பம்.
அன்னம் - சோறு. இப்போதெல்லாம் 'ரைஸ்' என்றுதான் சொல்கிறார்கள். ரைஸ் என்றால் அரிசிதானே! அரிசியை அப்படியே வைத்தால் சாப்பிடுவார்களோ?

மத்து - கீரைகள் மசிய வைக்க, தயிரிலிருந்து நெய் எடுக்க பயன்படும் மரத்தாலான பொருள்.
உறைமோர் - பாலைக் காய்ச்சி ஆறிய பிறகு பழைய மோர் கொஞ்சம் அந்த பாலில் ஊற்றி தயிராக்குவார்கள். அந்த பழைய மோருக்கு உறைமோர் பாலை தயிராக உறைய வைக்கும்.
குட்டை - சிறிய அளவில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதி (குளத்தை விட சிறிய பரப்பு) கிராமப்புறங்களில் தென்னை மட்டைகளை கீற்று முடைய இதில் ஊறவைத்து பின்பு கீற்று முடைவார்கள்)இந்த மாதிரி குட்டைகளில் எருமை மாடுகள் வெயில்காலங்களில் விழுந்து கிடக்கும். நம்ம ஊர் அரசியல்வாதிகளை ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று என்று கிண்டல் செய்வோரும் உண்டு.
ஏதோ எனக்கு ஞாபகத்தில் தோன்றியவற்றை வைத்து எழுதியிருக்கிறேன். முடிந்தால் அடுத்த பதிவு போடலாம். அடுத்து மூன்று பேரை இழுத்துவிடவேண்டும்...
எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாரும் எழுதிவிட்டார்கள்.
ஆகவே.... இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் இதுவரை எழுதவில்லையென்றால், யாராக இருப்பினும் எழுத அழைக்கிறேன்.