Thursday, May 5, 2011

மணல்வீடு...


உடைந்துவிடக்கூடியதல்ல
நாங்கள் கட்டிய மணல்வீடு
இது எங்கள்
மனங்களால் கட்டியது...
விடுமுறை முடிந்து
வீடு திரும்பும்போது
இதன் நினைவு கோட்டைகளை
எடுத்துச்சென்று
எங்கள் மன அடுக்குகளில் காப்போம்...
மறையாமல் வீற்றிருக்கும்
என்றும் இந்த மணல்வீடு...

- சூர்யநிலா, சேலம்.


 (பிருந்தாவனம் ஆசிரியர் குழு)


செல் :  9789507810

Tuesday, March 15, 2011

கவிதை

உன்னால் எப்பொழுதும்
தவறுதலாகவே
மொழிபெயர்க்கப்படுகிறது
யாரும் அறியாத
ஊமையின் கனவாய்
என் மௌனங்கள்

- P.K. ராஜேஸ்வரி

நன்றி- யாழிசை குறுஞ்செய்தி கவிதை இதழ்

உங்களுக்கும் குறுஞ்செய்தி வடிவில் கவிதை பெற
தொடர்பு கொள்ளுங்கள்- 99763 50636

Wednesday, February 16, 2011

படித்ததில் பிடித்தது

வசந்தத்தைத் தேடிய
வண்ணத்துப்பூச்சி ஒன்று
அலுத்துப்போய் அமர்ந்தது
மண்டையோட்டின் மீது...

- ஆம்பல் மாதவி

Friday, August 13, 2010

கவிதை'கள்'

பூக்களின் காதில்
ரகசியம் சொல்லி
வெகுமதியாய்
தேன்துளி வாங்கும்
வண்ணத்துப்பூச்சி!
- மித்ரா

**********************
என் கவிதைகளில்
காதலை விதைக்கத் துணிவின்றி
மொத்த விதைகளையும்
சேமித்துக் கொண்டிருக்கிறேன்
மௌன குகைக்குள்...
சுற்றங்களின் சந்தேகம்
என் மேல்  முளைத்துவிடும் என்ற அச்சத்தில்!
- ரம்யா

*********************
தேவதைகளை சந்திக்கவே
அவரவர் தவமிருக்கையில்
எனக்கு மட்டும் அதை
பரிசாக கொடுத்தது
காதல்!
- முத்து ஆனந்த்

*******************

பெற்றவர் காப்பகத்தில்
காக்கைக்கு
கைப்பிடிச் சோறு
- தம்பி

இது நான் ரசித்த கவிதைகள். உங்கள் பார்வைக்காக....

Monday, August 2, 2010

காத்திருத்தலின் வலி!

எல்லா கதவுகளையும்
மூடியபோது
நீ வந்தாய்...

சாளரங்களையாவது
திறக்கும்படி மன்றாடினாய்...

நான்
புகைக்கூண்டுகளையும்
அடைத்துவிட்டு வந்தேன்...

காத்திருப்பு காலங்கள்
வலி மிகுந்தது தோழி...

அப்போது,
சூரிய வெப்பங்கள்...
நெருப்பு சாட்டைகளால்
விளாசிப்போகும்...
மௌன உதடுகள்
விரிசல் கோட்டை
வேகமாக கிழிக்கும்...

தேவையா தோழி
அந்த காத்திருப்பு?

அதனால்தான் இந்த கதவடைப்பு
காரியங்கள்...

மெல்ல கதவிடுக்கின் வழியே
நோக்கினேன்...

வெளியேறிக் கொண்டிருந்தாய்...
இப்போது
நட்சத்திரங்கள் முறைத்தன.

அது உன் கண்களைப் போல தெரிந்தது!

- சூரியநிலா (9789507810)

Monday, July 19, 2010

மழை நாளொன்றில்தானே..

மௌனம் பூண்டு கிடந்தது
காதல்
தன்னைப் பிரிந்து சென்ற
மழைக்காதலியின்
பரிசத் தீண்டல்கள்
கிட்டாத சோகத்தில்...

தன்னின் துயர கண்ணீர்களை
பெரும் அலையென
பிரசவித்துக் கொண்டிருந்தது...

நெடும் கூந்தலொன
விரிந்துகிடக்கும்
தனது கரைகளில்
கால்நனைத்து செல்லும்
காதலர்களை
மிகுந்த ஆதங்கத்துடன்
அது எட்டிப்பார்த்து
கண்ணீர் உகுத்துகிறது...

 பிறகு,
பெரும் மழையொன்று
கொட்டத் தொடங்குகிறது,

உன் விழியில்
நீர்பூக்க கண்டேன் தோழி...

ஒரு மழை நாளில்தானே
கொடும் கரமொன்று
உன்னையும் என்னையும்
பிரித்தது...?

நம்மிரு உடல்கள்
வேறு வேறு
உடல்களுக்கு உறுதி
செய்யப்பட்டது
மழை நாளொன்றில்தானே.. தோழி...

நீயும் நானும்
அதை
விழிகளிலிருந்து தருவித்து கொள்கிறோம்
அவ்வப்போது...
பெரும் கேவலுடன்..!
- சூரிய நிலா,
9789507810

Sunday, July 11, 2010

மண்வாசனைக் கவிதை

செவக்காடு உழுது
சீராக பாத்திகட்டி
கமலைத் தண்ணி எரச்சி
கடலைப் பயிறு
போட்டுவிட்டேன்...

தேனி சந்தையிலே
தேடி வாங்கிவந்து
தெக்காட்டு வயலிலே
தென்னங்கன்னு
நட்டு வச்சேன்...

அத்தை மக
ஒன்நெனப்பை
மனசுக்குள்ளே
ஊனி வச்சேன்...

கடலையும் பூத்து
காய்ப்புக்கு வந்துருச்சு...

கன்னு மரமாகி
கொலை கொலையா தள்ளிருச்சு...

நெஞ்சுக்குள்ளே
ஊனிவச்ச
ஒன் நெனப்பு விதை
மட்டும் தாண்டி
வேர்ப்புழு விழுந்து
வெட்டியா காய்ஞ்சிருச்சு...

- சங்கர பாண்டியன், (9952895010)
வடுகப்பட்டி.

நன்றி- ராகா குறுஞ்செய்தி கவிதை இதழ் (9786098440)

செவக்காடு- செம்மண் வயல்
கமலைத்தண்ணி- கிணற்று தண்ணீர்