Tuesday, September 8, 2009

படித்ததில் பிடித்த அய்க்கூ



அலுவலகம் போகும் பெண்
நகம் வளர்க்கிறாள்
கூட்டமாகவே பேருந்து
- நாணற்காடன் (செ.பே - 9942714307)

போதைவஸ்து கசக்குகிறான்
உள்ளஙகையில் தேய்கிறது
ஆயுள்ரேகை
- ராமலிங்கம் (செ.பே.எண்- 9842277982)


நீ என்பது தனிமை
நான் என்பது முன்னிலை
நாம் என்பது படர்க்கை!
- ஞானசேகரன் (செ.பே.எண்- 9842579597)

Tuesday, August 25, 2009

அய்க்கூ கவிதைகள்

கிழிந்த புடவை
மறைத்து கட்டும் அம்மா
பாவம் தாவணிப்பெண்.

•••••••••••••••••

வேலிகள் தாண்டி
மேயப் பார்க்கின்றன
விழிகள்.

••••••••••••••••••

வரதட்சணை கொடுத்த அப்பா
மகிழ்ச்சியில் திளைத்தார்
கையில் பேத்தி
••••••••••••••
படிச்சிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். இலக்கியா, தகவல் மலர் வலைத்தளத்திற்கும் வருகை தாருங்கள்.

Thursday, August 13, 2009

சுதந்திரக் கனவுகள்...



ஒரு
ஆகஸ்ட் 15-ல்
வெள்ளை இருட்டுகள்
வெளியேறிய பின்

இருநூறு ஆண்டுகளாய்
அடிமைப்புழுதியில்
அழுந்திக் கிடந்த
எங்கள் சுயச்சூரியனை
தூசு தட்டி
ஜனநாயக சட்டை
அணிவித்தோம்

என்னாயிற்று?

ஆயிரமாயிரம்
முன்னோர்களின்
குருதியில் பூத்த
சுதந்திரச் சோலைக்குள்
இன்று
கொரில்லாக்கள் அல்லவா
குடிபுகுந்தன

அரசியல் சிற்பிகளிடம்
செதுக்கச் சொல்லித்தானே
உளி கொடுத்தோம்
சிம்மாசனத்தில் அமர்ந்து
பாரதத்தை
சிதைக்கச் சொன்னது யார்?

இடியாய் விழும்
அரசியல் அடியில்
வலி பொறுக்காத தேசம்
பாஞ்சாலியாய் கதறுகையில்
கை கொடுப்பதாய் வந்த
கண்ணபிரான்களோ
துச்சாதனனுக்கு அல்லவா
துணைபோயினர்?

எல்லோரும் பசியாறத்தான்
சமைக்கப்பட்டது
ஆனால்
சுதந்திரச் சோறு
பரிமாறப்படுவதோ
பணக்காரர்களின் பந்தியில் மட்டுமே

சிதறும் சில
பருக்கைகளும்
சில்லரைக்கே விநியோகம்

பசிக்காய் அழுது... அழுது...
பசி மறந்த பிறகுதான்
இங்கே
கூழ்காய்ச்சவே
திட்டமிடுகிறார்கள்

அழுத குழந்தைகளுக்காய்
ஆப்பம் வாங்கப் போனவர்களின்
ஏப்பச் சத்தத்தில்
எங்கள்
காது பிளக்கிறது

ஆனாலும் இவர்கள்
நன்றி மறக்காதவர்கள்
அதனால்தான்
ஆண்டுகள் ஐந்திற்கு
ஒருமுறையேனும்
எங்கள் வாசலுக்கு
வணக்கம் போட வருகிறார்கள்.

நாங்கள்கூட
புத்திசாலிகள்தாம்

ஆனாலும்
வாக்குறுதி விளக்கில்
விட்டில்களாய் அல்லவா
விழுந்துவிடுகிறோம்.

என்ன செய்வது?

கடிக்கும் என்று தெரிந்தும்
நாய்கள் வளர்ப்பது
எங்கள் நாகரீகமாயிற்றே

- கோ. பாரதிமோகன்.

Thursday, August 6, 2009

படித்ததில் பிடித்த அய்க்கூ



பசியைப் போக்கியது
குருணைக் கஞ்சி
பாவம் கோழிகள்

- பவுல்ராஜ், புதுகை
தொ. பே எண் : 9994703318

அக்னி, வாயு, ஈசான மூலை
அடகில் கிடக்கிறது
சொந்த மூளை

- ராசி. கண்மணி ராசா.
செ. பே. எண்: 9245317602

ஜன்னல் வழியே
கைநீட்டும் குழந்தைகள்
வெளியே மழை

- நாணற்காடன், ராசிபுரம்.
செ. பே. எண்: 9942714307

கோயில் மணியோசை
பரவசத்தில் மக்கள்
கலவரமாய் புறாக்கள்

- கன்னிக்கோயில் ராஜா, சென்னை.
செ. பே. எண்: 9841236965

நன்றி : அய்க்கூ கவிதைகள் 'கன்னிக்கோவில் ராஜா' அவர்களின் எஸ்.எம்.எஸ். அய்க்கூ இதழிலிருந்து...

Friday, July 31, 2009

ஈரோடு பதிவர்களே...

ஈரோடு பதிவர்களே...

ஜுலை 31, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 11 இரவு 9.30 வரை மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் ஈரோடு புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.


ஜுலை 31, வெள்ளிக்கிழமை மாலை தொடங்கும் விழாவில் ஸ்டாலின் குணசேகரன், மயில்சாமி அண்ணாதுரை போன்றோர் கலந்து கொள்கிறார்கள்.


ஆகஸ்ட் 1, சனிக்கிழமை...

பேராசிரியர் ஞானசம்பந்தன் 'கற்பனவும் இனி அமையும்' என்ற தலைப்பிலும், வழக்கறிஞர் சுமதி 'நேய அருள் மெய் அன்றோ?' என்ற தலைப்பிலும் சிறப்புரை வழங்குகிறார்கள்.

ஆகஸ்ட் 2, ஞாயிற்றுக்கிழமை...

த. உதயசந்திரன் 'உலகை மாற்றிய புத்தகங்கள்' என்ற தலைப்பிலும், கவிஞர்- பாடலாசிரியர் அறிவுமதி 'பச்சைத் தமிழ்' என்ற தலைப்பிலும் சிறப்புரை.


ஆகஸ்ட் 3, திங்கட்கிழமை...

பேராசிரியர் பெரியார்தாசன் 'மனமது செம்மையானால்' என்ற தலைப்பிலும், வழக்கறிஞர் த. இராமலிங்கம் 'நிற்க அதற்குத் தக' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 4, செவ்வாய்கிழமை...

பேராசிரியர் அப்துல் காதர் 'பழைய கடல் புதிய அலை' என்ற தலைப்பிலும், கவிஞர் பா. விஜய் 'புத்தகமும் சினிமாவும்' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 5, புதன்கிழமை...


பேராசிரியர் த. இராஜராம் அவர்கள் 'நல்லதோர் வீணை' என்ற தலைப்பிலும், எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் 'கற்றுக் கொடுக்கும் கதைகள்' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 6, வியாழக்கிழமை...


பழ. கருப்பையா அவர்கள் 'யோசிக்கும் வேளையில்' என்ற தலைப்பிலும், பத்திரிகையாளர் சுதாங்கன் 'மேவும் விரல் யார் உனக்கு?' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 7, வெள்ளிக்கிழமை...

தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் 'இனி ஒரு விதி செய்வோம்' என்ற தலைப்பிலும், திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் 'எய்த விரும்பியதை எய்தலாம்' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 8, சனிக்கிழமை...

மத்திய இணையமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன் 'தேடிவரும் தென்றல்' என்ற தலைப்பிலும், பர்வின் சுல்தானா 'உதவாதினி ஒரு தாமதம்' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 9, ஞாயிற்றுகிழமை...

டாக்டர் சுதா சேஷய்யன் 'வையத் தலைமை கொள்' என்ற தலைப்பிலும், அருட் தந்தை ஜெகத் கஸ்பர் 'மண்ணில் கால்பதித்து வானில் கைவீசி' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 10, திங்கட்கிழமை...

பேராசிரியர் ம. இராசேந்திரன் 'அகர முதல...' என்ற தலைப்பிலும், கவிஞர் ஈரோடு தமிழன்பன் 'எதுபோல என்று சொல்லலாம்?' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள்.


ஆகஸ்ட் 11, செவ்வாய்கிழமை... முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் நிறைவுப் பேருரையுடன் விழா நிறைவு பெறுகிறது.


பதிவர்கள் கலந்துகொண்டு அனுபவங்களை இடுகையிட வேண்டுகிறேன்.

Monday, July 27, 2009

நிலாப் பெண்ணே... (தினமலர்- வாரமலரில் எனது கவிதை)



•பெண்ணே உன்னை
நிலவாக
மலராக
கதிரின் ஒளியாக
கற்பனை செய்ய
என் மனம் ஏற்கவில்லை.

•காரணம் என்னவென்று
கண்மணியே புரிகிறதா...

•நிலவும் ஒருநாள்
தேய்ந்துவிடும்

•மலரும் மணத்தை
இழந்துவிடும்

•கதிரின் ஒளியும்
மங்கிவிடும்

•ஆகவேதான்
பெண்ண உன்னை...

• பி.கு: இது தினமலர்- வாரமலரில்...ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொன்னூற்றி ஒன்றில் வந்த கவிதை. ஹி... ஹி...

Thursday, July 9, 2009

காதலின் வலிமை



எத்தனையோ
பொய்கள் சொல்லியிருக்கிறேன்
உன்னிடத்தில்...

பொய்யென்றே தெரிந்தும்
ஏற்றுக் கொண்டிருக்கிறாய்
அனைத்தையும்!

'என்னை மறற்திடுங்க' என்று
நீ சொன்ன பொய்யை
பொய்யென்றே
நினைத்திருந்தேன்
பிரிவு நேரும் வரை.

காதலின் வலிமையை
காலங்கள் உணர்த்துமென
காத்திருந்தேன்.

ஜாதியின் வலிமையை
உணர்த்தியது
உன் திருமணம்!


(இந்த கவிதை காதலில் தோல்வியுற்ற என் நண்பனுக்காக...)

Monday, June 29, 2009

அய்க்கூ கவிதைகள் (29.6.2009)



குழந்தைகள் விளையாட்டில்
அம்பலமாகிறது
குடும்ப ரகசியம்

*************

தூசு பறக்காமல்
தரையை பெருக்குகிறது
மரத்தின் நிழல்

**************

தனித்த இரவுகளில்
பூத்துக் கிடக்கின்றன
கண்கள்

இங்கும் என்னை காணலாம்...!

Tuesday, June 23, 2009

அய்க்கூ கவிதைகள் (24.6.2009)

அந்திபொழுது
கூடுதிரும்பும் பறவைகள்
சலசலக்கும் மரம்

*************

கூட்டம் போட்டு
பயனற்று போயின
கலையும் மேகங்கள்

*************

மகளிர் உரிமை
மீட்டுக் கொடுத்தது
பொருளாதாரச் சூழல்

உரையாடல் சிறுகதை போட்டிக்கான எனது கதை படிக்க இங்க க்ளிக்கவும்!

Monday, May 25, 2009

நிகழ்வுகள்

1. கவிஞர் அருணாசல சிவா அவர்களின் பொன்விசிறி அய்க்கூ நூல் வெளியீட்டு விழா.
நாள் : 31.5.09 ஞாயிற்று கிழமை.
நேரம் : காலை 10 மணி.
இடம் : ஸ்ரீனிவாசா சாஸ்திரி ஹால்( ரானடே நூலகம்),
லஸ் கார்னர்,(காமதேனு திரையரங்கம் எதிரில்), சென்னை- 4
தலைமை : பேராசிரியர் முகிலை இராசபாண்டியன், மாநில கல்லூரி, சென்னை- 5
வரவேற்புரை : வசீகரன்(பொதிகை மின்னல் ஆசிரியர்)
சிறப்புரை : ஓவியக்கவிஞர் அமுதபாரதி

மற்றும் கிரிஜா மணாளன், கவிஞர் அ.கெளதமன், கவிஞர் நாணற்காடன், கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி, கவிஞர் இளையகவி சலாமத்அலி
(இந்நிகழ்வில் நானும், என் நண்பர் பாரதிமோகனும் கலந்து கொள்கிறோம். எனவே தாங்களும் கலந்து கொள்ள அழைக்கிறேன்)

2. கவிஞர் வாசல் பட்டு இராசபாரதியின் எழுதுகோலின் விழுதுகள் கவிதை நூல் வெளியீட்டு விழா.

நாள்: 31.05.09 ஞாயிற்று கிழமை.
நேரம் : காலை 9.30 மணி.
இடம் : இந்திராநகர் இளைஞர் விடுதி (வாட்டர் டேங் அருகில்)அடையாறு பணிமனை நிறுத்தம், சென்னை - 600 020
வரவேற்புரை : கவிஞர் சொர்ணபாரதி(கல்வெட்டு பேசுகிறது இதழாசிரியர்)

தலைமை:
பாரதி சுராஜ், நிறுவனர், பாரதி கலைக் கழகம்.
நூல் வெளியீடு : கலைமாமணி கவிக்கோ அப்துல் ரகுமான்.
மற்றும் பலர்.
ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறன்.

Saturday, May 16, 2009

வட்டங்கள் (வட்டத்திற்குள் பெண்)


வட்டத்திற்குள் பெண் என்ற கவிதை எழுத திகழ்மிளிர் என்னையும் அழைத்திருந்தார். எனக்கு எதுவும் தோன்றவில்லை. இக்கவிதை 'காற்றில் மிதக்கும் ஆகாயம்' என்ற கவிதைத்த தொகுப்பில் இடம்பெற்றிருந்தது. அதை உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன்...

ட்டத்தைவிட்டு
வெளியேற வேண்டுமெனில்
தாண்டிச்ச செல்ல
துணிவு வேண்டும்
இல்லையேல்
அடைபட்டு கிடக்கவேண்டும்

தயக்கங்களால்
தாமதிக்க நேரிட்டது
இப்போது
தாண்டவும் முடியாமல்
சிறைப்படவும் முடியாமல்
வட்டங்களும்
வாழ்க்கையும்

- அ.கார்த்திகேயன், சேலம்

போன்: 9952722942

Thursday, May 7, 2009

கஜல் கவிதைகள்

என் இதயத்தை
உன்னிடம் யாசிக்கிறேன்

சாபத்தையேனும்
வரமாகக்கொடு

****************
காதலைப்போல்
இதயத்திற்கு
இன்பமுமில்லை, வலியுமில்லை

************

உன்னைச்
சொற்களில் தேடுகிறேன்
நீயோ
மெளனத்தில்
ஒளிந்திருக்கிறாய்

*************

வண்ணங்களின்
கனவே!
உன்நிழல்
என்
மரணத்தின்மீது
விழுகிற வெளிச்சம்

அக்னி சொரூபம்
என் காதல்
நீ வந்து
அணைக்கக்கூடாதா

- கோ.பாரதிமோகன்


என் முகம் பார்க்க இங்கே க்ளிக்கவும்.

Friday, April 10, 2009

அய்க்கூ கவிதைகள்


அழகிய வலை
பின்னிக் காத்திருக்கும்
சிலந்தி

***********

வலிக்காதா
ஒற்றைக்காலில் நிற்கும்
நடராசனே!

************

மின்தடை இரவு
கூடிப்பேசும்
உறவுகள்

************
ஆயுள்முழுக்க
ஆடைமாற்றவேயில்லை
வண்ணத்துப்பூச்சி

Monday, April 6, 2009

கஜல் கவிதைகள்




அர்த்தம் நழுவிய
சொல் நான்
அகராதியில் எப்படி ஏறுவது?


************

உன்சின்னத்தில்
என்காதல்
செல்லாத ஓட்டு

*********

துயரத்தின் தோட்டம்
இந்த வாழ்வு
நான்
கண்ணீர் இறைக்கப்
பிறந்தேன்

**********

நிலவின் கிரணத்தை
உடுத்துபவளே
உன் ஒளியால்
என்னை
மறைத்துவிடு

**********

சொற்களின் வழியாகத்தான்
மெளனத்தை
அடையமுடியும்
நான்
உன்வழியாக
காதலை அடைந்தேன்

**********

நீ இல்லா இதயத்தில்
கல்லறையின் நிழல்
கவியட்டும்

- கோ.பாரதிமோகன்

Thursday, April 2, 2009

கவிதை(கள்) - 2



எதிர்பாராத திருப்பங்களில்
சந்தித்துக்கொள்கிறோம்
நீயும் நானும்...

வழிவிட்டு விலகி
நடக்க விரும்பி
இருவரும்
இடவலமாய் திண்டாட
தடுமாறுகிறது மனசு!

*******************

நம் சந்திப்பு நிகழாத நாட்களில்
சேமிக்கப்படுகின்றன
செலவழிக்கப்படாத
உனக்கான முத்தங்கள்!

Monday, March 30, 2009

கவிதை


நமக்குள் உண்டான
பிணக்குகளில்
பிடிபடுகிறது
உன்னைப்பற்றிய
புரிதல்!


****************

உன் காதலி எப்படி?

கேட்பவர்களுக்கு
எப்படி சொல்வேன்...

உவமைகளுக்குள்
அடங்கமறுக்கும்
உன்னை!

Friday, March 27, 2009

மழை... மழை.... மழை...


அபூர்வமானதுதான்
மழையும்
அவளின் தீண்டலும்

***********

மழைக்கால
காளான்கள்
அவளின் நினைவுகள்

*********

மழைக்காலம்
இதமாய் இருக்கிறது
அவளின் நினைவுகள்

*********

மழைக்கண்டு சலிப்பு
தாகம் தீர்க்கும்
தண்ணீர் பாட்டில்!

***********

மழையில் நனையும் குழந்தை
தடுக்க முடியவில்லை
ஒழுகும் குடிசை

Wednesday, March 25, 2009

ஊடல் பொழுதுகள்...



பனிவிழும் இரவு
நீளும் நிசப்தத்தை
தின்று தீர்க்கி்ன்றன
தகிக்கும் நினைவுகள்

கனத்த மெளனத்தை
கலைத்துப்போடும்
தெருநாய்கள்

உறக்கம் துறந்த
விழிகளில்
தொக்கிநிற்கும்
ஊடல் பொழுதுகள்!

Tuesday, March 24, 2009

இது அய்க்கூ மாதிரி.

இது அய்க்கூ மாதிரி.(நல்லா கவனிங்க...இது அய்க்கூ மாதிரிதான். மாதிரி அய்க்கூ அல்ல...)

ஊர்மரியாதை யாருக்கு
சச்சரவில் சிறைவைப்பு
கோவிலுக்குள் சிலைகள்

***********

நள்ளிரவில்
வியர்வை குளியல்
மின்தடை

************

சாலையோரம்
நிழல்தரும்
அடிக்குமாடி

*********

காதல் தோல்வி
கெளரவம் கிடைத்தது
கவிஞன்

*********

அகராதிகள் பலபடித்தும்
அர்த்தம் புரியவில்லை
காதல்

**********

Monday, March 23, 2009

அய்க்கூ கவிதைகள்


அந்தி சரியச் சரிய
தென்படுகின்றன
புதிய முகங்கள்
**************

சூரியனாய் பிரகாசிக்கும்
பெண்ணின் சுதந்திரம்
மேற்குமுட்டும்வரை
**************

பழம்தின்று பசியாறிய
பறவையறியாது
எச்சத்தின் மதிப்பு
**************

எங்கோ தூரத்தில்
கேட்கிறது
ஒற்றைக் குயிலோசை

Thursday, March 19, 2009

ஸ்... யாரும் சிரிக்கக்கூடாது.

கலைஞர் : மூன்றாவது அணி மூன்றாவது கண் போன்றது.

ஜெயலலிதா : மூன்றாவது கண் என்பது சிவபெருமானின் நெற்றி்க்கண்ணை குறிக்கும். நெற்றிக்கண் மூடியிருக்கும் வரைதான் தவறு செய்வோருக்கு பாதுகாப்பு. நெற்றிக்கண்ணை திறந்துவிட்டால், எதிரேயுள்ளவர்கள் எரிந்து சாம்பலாகிப்போவார்கள்.

கலைஞர் : மூன்றாவது கண்ணை பெரியார் வழியில் வந்தவர்கள் யாரும் நம்பமாட்டார்கள்.

இல.கணேசன்: தி.மு.க.வுடனோ, அ.தி.மு.க.வுடனோ விஜய்காந்த் கூட்டணி வைத்தால் அவரது தனித்தன்மையை இழந்துவிடுவார்.தனித்து நின்றால் வாக்கு வங்கியை குறைந்துவிடும். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி என்றால் மட்டுமே இரண்டையும் காப்பாற்ற முடியும்.

நல்லக்கண்ணு: அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் 7 தொகுதிகளை கேட்டுள்ளோம்.

Monday, March 2, 2009

வழக்கொழிந்த சொற்கள் (மீட்பு)

வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள் பற்றி பலரும் வலைதளத்தில் எழுதிவருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக மூன்றுபேரை எழுதச் சொல்லும் முறையால் பல அரியாத, அறியத்தவறிய தமிழ்ச் சொற்களை மீண்டும் நம் பார்வைக்கு கிடைக்கிறது. அந்த வகையில் என்னை எழுதச் சொன்ன நைஜீரியா ராகவன், மற்றும் தேவா அவர்களின் வேண்டுகோளின்படி எனக்கு தெரிந்த சில சொற்களை உங்களுக்காக...
ஊடல் - அன்பால் இணைந்திருந்தவர்களிடையே ஏற்படும் சிறு இடைவெளி.
கூடல் - அன்பால் இணைந்திருத்தல்.
ஊதக்காற்று - குளிர்நிறைந்த காற்று.
நிரல் - வரிசை
பஞ்சணை - பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கை.
சரடு - கிணற்றில் நீர் இறைக்க உருளும் உருளை.
சல்லடை - மாவு, அரிசி போன்ற பொருட்களை சலிக்க உபயோகப்படும் பொருள்.
அந்தி - மாலைப் பொழுது.
பஞ்சாரம் - கோழி குஞ்சு பொரித்தபிறகு அடைத்து வைக்கும் கூடை.
பத்தாயம் (குதிர்) - நெல் மணிகளை சேமித்து வைக்க பயன்படும். இது மரத்தினாலும், மண்ணாலும் செய்யப்பட்டிருக்கும்.
உவகை - மகிழ்ச்சி, இன்பம்.
அன்னம் - சோறு. இப்போதெல்லாம் 'ரைஸ்' என்றுதான் சொல்கிறார்கள். ரைஸ் என்றால் அரிசிதானே! அரிசியை அப்படியே வைத்தால் சாப்பிடுவார்களோ?

மத்து - கீரைகள் மசிய வைக்க, தயிரிலிருந்து நெய் எடுக்க பயன்படும் மரத்தாலான பொருள்.
உறைமோர் - பாலைக் காய்ச்சி ஆறிய பிறகு பழைய மோர் கொஞ்சம் அந்த பாலில் ஊற்றி தயிராக்குவார்கள். அந்த பழைய மோருக்கு உறைமோர் பாலை தயிராக உறைய வைக்கும்.
குட்டை - சிறிய அளவில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதி (குளத்தை விட சிறிய பரப்பு) கிராமப்புறங்களில் தென்னை மட்டைகளை கீற்று முடைய இதில் ஊறவைத்து பின்பு கீற்று முடைவார்கள்)இந்த மாதிரி குட்டைகளில் எருமை மாடுகள் வெயில்காலங்களில் விழுந்து கிடக்கும். நம்ம ஊர் அரசியல்வாதிகளை ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று என்று கிண்டல் செய்வோரும் உண்டு.
ஏதோ எனக்கு ஞாபகத்தில் தோன்றியவற்றை வைத்து எழுதியிருக்கிறேன். முடிந்தால் அடுத்த பதிவு போடலாம். அடுத்து மூன்று பேரை இழுத்துவிடவேண்டும்...
எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாரும் எழுதிவிட்டார்கள்.
ஆகவே.... இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் இதுவரை எழுதவில்லையென்றால், யாராக இருப்பினும் எழுத அழைக்கிறேன்.

Thursday, February 19, 2009

ஈழத்தின் நிலை மாறாதா?

ஈழத்தின் அவலநிலைமாறாதா?

வாயைத்திறந்து சொல்ல முடியவில்லை என்றாலும், எங்கள் வலியை உணரமுடிகிறதா உங்களால்?


உடைமாற்றிக்கொள்ள அல்ல இந்த அழுகை...


கண்ணை இழந்தாலும் நம்பிக்கை இழக்கவில்லை.
இலங்கையில் என்னதான் நடக்கிறது? என்று கேள்விக் கேட்பவர்கள் இங்கு சென்று அந்த கோரத்தை பார்க்கலாம். மனதை திடப்படுத்திக்கொண்டு செல்லவும். stop-the-vanni-genocide.blogspot.com, puthinam.com

Friday, February 13, 2009

காதலர் தினம் கொண்டாடப்போகிறீர்களா?


காதலர் தினம் கொண்டாடுவது ஒன்றும் பெரிதில்லை. எத்தனை காதலர்கள் வாழ்க்கையில் இணைகிறார்கள்.அப்படியும் இணைந்த காதலர்கள் எத்தனைபேர் ஒழுங்காக வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பது கேள்விக்குறிதான்.
எனக்குத் தெரிந்த ஒருவர் காதலிக்கும் போது அந்த காதலிக்காக உருகு உருகென்று உருகினார். அந்தப் பெண்ணை ஒருநாள் பார்க்காவிட்டாலும் சாப்பிட மாட்டார். ஆனால், பெற்றோரை சம்மதிக்க வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை, பதிவு திருணம் செய்துகொள்ளவும் தைரியமில்லை. அந்தப்பெண்ணை மறந்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டுவிட்டார். அந்தப் பெண்ணும் வேறொரு ஆடவணை திருமணம் செய்து கொண்டு விட்டார்.(அந்தப் பெண் அவருக்காக நிறைய நாட்கள் காத்திருந்தாள் என்பது உண்மை.)
அடுத்து மற்றொரு நண்பர். இவரும்கூட அந்தப் பெண்ணை விழுந்து விழுந்து காதலித்தார். அந்தப் பெண்ணையே இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார். அப்புறம் என்ன என்கிறீர்களா? அவர்கள் வாழ்க்கையின் போக்குதான் சரியில்லை.(இத்தனைக்கும் அந்த நண்பருக்கு வருமானத்திற்கு குறைவில்லை.) இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்வது, அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது, இருவரும், பிறந்த வீட்டுக்கு(தனிகுடித்தனம் இருக்கிறார்கள்) அடிக்கடி செல்வது இப்படியே போகிறது அவர்கள் வாழ்க்கை. இவர்கள் காதலித்தது குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள். இந்த ஐந்து வருடங்களில் ஒருவரையொருவர் புரிந்துகொண்டதுதான் என்ன?
எங்கள் குடும்பத்தில் பெரும்பாலோர் காதல் திருமணங்கள்தான் செய்திருக்கிறோம்.(நான் உட்பட) எங்களுக்குள் சிற்சில சண்டைகள் வரும். அதுவெல்லாம் சில மணித்துளிகள்தான் நீடிக்கும். பிறகு சமாதானமாகிவிடுவோம். பின்பு அந்த சண்டையையே வைத்து கிண்டல்கூட பண்ணிக்கொள்வோம். காதலித்தோ, பெற்றோர் பார்த்து வைத்த திருமணமோ எதுவானாலும் ஒருவரையொருவர் புரிந்து வாழ்ந்தால்தான் அந்த வாழ்க்கை இனிக்கும். விட்டுக்கொடுத்து வாழ்ந்தால்தான் வாழ்க்கை.காதல் திருமணம் செய்வோர் எல்லோரும் காலமெல்லாம் காதலுடன் வாழ்க.

Sunday, February 8, 2009

பதினைந்து நாளில் ஏதாவது அதிசயம் நடந்தால்தான் உண்டு- ஈழத்தமிழரர் அகிலனின் ஏக்கம்.


பதிவர்கள் சார்பாக ஈழத்தமிழருக்காக தன்னுயிர் ஈந்த முத்துக்குமரனுக்கு அஞ்சலிக்கூட்டம் தி்ட்டமிட்டபடி சென்னை தியாகராயர் நகர், நடேசன் பூங்காவில் நடைபெற்றது. சரியான நேரத்திற்கே கூட்டம் ஆரம்பித்ததே இந்த நிகழ்வின்போதுதான் என்றபோதே நமது வலைப்பதிவர்களின் உணர்வினை புரிந்துகொள்ள முடிந்தது.
பதிவர்களின் அறிமுகத்திற்கு பிறகு ஒருவர் பேசினார்.(அனைவரின் பெயரை தவிர்க்கிறேன்.) ஈழத்தமிழருக்கான தமிழ் மக்களின் உணர்வுகளையும், பத்திரிகையாளர் சிலரின் போக்கையும் விலக்கிவிட்டு, இதற்காக நம்மால் செய்ய முடிந்தது எல்லாம் காங்கிரஸை புறக்கணிப்பதே, அதற்கு மாற்றாக பி.ஜே.பி. ஆதரிக்க வேண்டும் என்றார்.

அவர் கருத்துக்கு அனைவருமே பி.ஜே.பி.யால் மட்டும் என்ன செய்ய முடியும் என்றபோது, நமது எதிர்ப்பை காட்டத்தான் அவ்வாறு செய்யச் சொன்னேன் என்றார். மற்றபடி அனைவரும் ஒரே மாதிரிதான் அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற கருத்தே மேலாங்கியது.
வைகோ சிறப்பாக செயல்படுவதாக ஒருவர் குறிப்பிட்டபோது, அவரின் உழைப்பு விழலுக்கு இரைத்த நீராகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. காரணம், அ.தி.மு.க. கூட்டணியில் அவர் இருப்பதே. அவர் அக்கூட்டணியை விட்டு விலகி, ராமதாஸ், திருமா, தா.பாண்டியன் போன்றோர் கூட்டணி வைத்தால் நல்லது என்ற கருத்தும் பரவலாக இருந்ததை அறிய முடிந்தது.

அடுத்து பேசியவர் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் அகிலன். அவர் ஈழ நிலையை விளக்கிய போது அவையில் கனத்த மெளனம் நிலவியது. முஸ்லிம்கள் நாளைக்கு ஐந்து தடவை தொழுகை செய்கிறார்களோ இல்லையோ, நான் ஐந்து முறை இன்டர் நெட்டுக்குச் சென்று, ஈழத்தில் வாழும் எனது அம்மா, தம்பி, தங்கைகளின் பெயர் பலியானோர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வருகிறேன் என்றவர், முத்துக்குமரன் போன்றோர் தீக்குளிப்பது தமிழர்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இரு்ககலாம். ஆனால் அதனால் ஆவப்போவது என்ன என்று கேள்வி எழுப்பினார். ராஜபக்சேவின் முடிவில் அவர் தீவிரமாகவே இருப்பதாகவும், இன்னும் பத்து அல்லது பதினைந்து நாட்களில் ஒரு முடிவுக்கு வந்துவிடும் நிலையிலதான் இப்போது ஈழம் இருக்கிறது. அதற்குள் ஏதும் அதிசயம் நடந்தால்தான் உண்டு என்றபோது, அனைவரும் பேசத்திரணியற்று இருந்தனர்.

இந்திராகாந்தி,ராஜீவ் காந்தி போன்றோருக்கு செருப்பு மாலை போடப்பட்டது சம்பந்தமாக பேச்சு வந்தபோது, இதுவரை அவர்களை நாம் அனைவரும் மதித்தே வந்திருக்கிறோம். ஆனால் இன்றைய காங்கிரஸின் போக்கின்மீது உள்ள வெறுப்பின் வெளிபாடாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். தவிர, அந்த தலைவர்களை அவமதிப்பதை நாமும் கண்டிக்கிறோம் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

தொடரும் தீக்குளிப்பையும் கண்டிக்கப்பட்டது.ஈழத்தமிழருக்கா நம்மால் என்ன செய்ய முடியும் என்று விவாதிக்கப்பட்டது. பேரணி, ஆர்பாட்டம், துண்டறிக்கை வெளியிடுவது என்றெல்லாம் அலோசனைகளுக்குப் பின் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் இருக்கமே நிலவியது.
வந்திருந்த வாசகர் ஒருவர், இலங்கைப் பிரச்சனையில் இன்னும் பலருக்கு தெளிவில்லாமலே இருப்பதாக தெரிவித்தார். உழைக்கப் போன இடத்தில் தனிநாடு கேட்கலாமா என்ற கேள்வி பலருக்கும் இருப்பதாக தெரிவித்தவர், அதைப்பற்றி பதிவு எழுதுங்கள், முத்துக்குமரனின் இறுதி அறிக்கையை அனைவருக்கும் கொண்டு சேருங்கள் என்றார். அப்போது ஒருவர்(பெங்களூர் பதிவர்) வருகிற ஞாயிறு(15.2.2009) அன்று பெங்களூரில் ஆர்பாட்டமும், துண்டறிக்கைகள் வெளியிடுவதும் செய்யப்போவதாகவும், துண்டறிக்கைகள் கன்னடம்,ஆங்கிலத்திலே இருக்குமாறு செய்யப்பட்டுள்ளது.(தமிழில் இருந்தால் கன்னடர்கள் இந்த விசயத்தில் வேறு விதமாக எண்ணக்கூடும் என்பதால்) என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, மற்ற மொழி தெரிந்தவர்களும் அந்தந்த மொழிகளில் மொழிபெயர்த்து அனைத்து மொழிமக்களிடமும் இவ்விசயத்தை கொண்டு செல்ல வேண்டுமென்று தீர்மானமாகத் தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக ஈழத்திற்காக தீக்குளித்த தமிழர்களுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு கனத்த இதயங்களுடன் கலைய மனமில்லாமல் ஆங்காங்கே நின்று மீண்டும் மீண்டும் பலரும் பேசிக்கொண்டிருந்தனர்.

Monday, February 2, 2009

லஞ்சத்தை ஒழிக்க த.அ.உ.ச



தமிழ்நாட்டில் மட்டும் லஞ்ச, ஊழல்களுக்கு எதிராக 200 மேற்பட்ட இயக்கங்கள் இருக்கின்றன. ஆனால் பல இயக்கங்கள் அவர்களுக்கு வரும் அச்சுறுத்தல் காரணமாக செயல்படவில்லை என்பதே உண்மை.
2007 ஆம் ஆண்டில் மட்டும் 133 லஞ்ச, ஊழல் வழக்குகள் போடப்பட்டுள்ளனவாம். 2008ல் 226 வழங்குகள். ஆண்டுக்கு ஆண்டு வழக்குகள் அதிகரித்துவருகின்றன.
இதைப் மேம்போக்காகப் பார்க்கும்போது லஞ்ச, ஊழல் அதிகரித்து வருகிறார்போல் தோன்றுகிறது. ஆனால் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதால்தான் அதிக வழக்குகளும் அதிகரித்துள்ளன என்பது நிதர்சனமாகும்.
இந்திய அளவில் லஞ்ச பெறுவதில் நெம்பர் ஒண்ணாக இருப்பது பீகார் மாநிலமாம். நமது தமிழ்நாடு ஒன்பதாவது இடத்தில் உள்ளதாம். மாநில அரசு துறைகளில் முன்னணி வகிப்பது வருவாய்துறையாம். அதற்கடுத்து போக்குவரத்து துறை, பத்திரப்பதிவுத்துறை... இப்படி போகிறதாம். பொதுமக்களின் நண்பன் என்று சொல்-க் கொள்ளும் காவல்துறை ஏழாம் இடத்தைப் பிடித்திருக்கிறதாம். இப்போதெல்லாம் நூறு, இருநூறு என்பதெல்லாம் மலையேறிவிட்டன. லட்சக்கணக்கில் லஞ்சம் பெரும் நிலை உண்டாகிவிட்டது.
சென்னை நகரங்களில் சில குறிப்பிட்ட காவல் நிலையங்களில் பணியாற்ற பயங்கரப் போட்டியே நடைபெறுகிறதாம். எல்லாம் மாமுலான விஷயங்களுக்குத்தான் என்கிறது தகவல் வட்டாரம்.
லஞ்சத்திற்கு எதிராக போராடும் அனைத்து அமைப்புகளும் ஒன்றாக இணைந்து ஒரே கூட்டமைப்பாகப் போராட வேண்டும் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு முன்னால் கமிஷனர் என்.விட்டல் கூறியிருந்தார். அதைக்கவனத்தில் கொண்டு இந்திய ஊழல் ஒழிப்புபோர் கூட்டமைப்பு (அலுவலகம் 55, ரயில்வே பார்டர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை-33) 'மாறுங்கள் மாற்றுங்கள்' என்ற தலைப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு வரும் 19.2.2009 அன்று பயிற்சி வழங்க உள்ளார்கள். இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். தொலை பேசி எண்கள்: 64569900, 9710979797)
லஞ்சம், ஊழலை ஒழிக்க தகவல் அறியும் உரிமை சட்டம் மிகுந்த பலனளிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். இச்சட்டத்தின்மூலம் அரசின் திட்டங்கள் பற்றிய விவரங்கள் வெளிப்படையாக தெரியவரும்போது லஞ்சத்தின் வீரியம் குறையும். ஆனாலும் மத்தியில் 18 துறைகளை பற்றி நாம் கேள்வி ஏதும் கேட்க முடியாது என்று அறிவித்திருக்கிறது. இதுவே தமிழ்நாட்டில் 33 துறைகள் என்றிருக்கிறது. இவற்றை குறைத்தால் லஞ்சம், ஊழலும் குறையும் வாய்ப்பு அதிகரிக்கும்.
எல்லாவற்றையும்விட பொதுமக்களின் விழிப்புணர்வு அதிகரிப்பதுதான் விடியலுக்கான முதற்படியாக இருக்கும். லஞ்சமில்லா நாளைய உலகம் நம் கையில்!

Thursday, January 29, 2009

ஈழப்பிரச்சினையை கண்டித்து தமிழக வாலிபர் தீக்குளித்து மரணம்.

ஈழத்தில் அப்பாவித்தமிழர்களை கொன்று குவிக்கும் இராஜபக்சே அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடந்துவருகிறது. மனித சங்கிலி போராட்டம், ரயில் மறியல், சாலை மறியல், உண்ணாவிரதம் என்று அரசியல், சினிமாதுறையினர்,மாணவர்கள், பொதுமக்களும் எவ்வளவோ போராட்டங்கள் நடத்தி மத்திய , மாநில அரசுகளை முடுக்கிவிட்டு இந்திய அரசை போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். தமிழக மக்களின் தொடர் போராட்டத்தை கண்டு மசிந்த மத்திய அரசின் உத்தரவுக்கேற்ப இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மேனன் இலங்கை சென்று வந்தார். தற்போது பிரணாப் முகர்ஜியும் சென்று வந்துள்ளார். ஒவ்வொருவரும் சென்று வந்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்நத வாலிபர் முத்துக்குமரன் சென்னையில் பணிபுரிந்து வந்தவர், ஈழப்பிரச்சனையை கண்டித்து இன்று (29.1.08)காலை 10.45 மணியளவில் சென்னை சாஸ்திரிபவன் முன்பாக தீக்குளித்தார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். ஈழத்தில் பலர் குண்டு வீசி கொல்லப்பட்டதை படித்தும், தொலைக்காட்சியில் பார்த்தும் வந்த தமிழக மக்களுக்கு இந்த மரணம் மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசும், மத்திய அரசும் நிலமையி்ன் தீவிரத்தை உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாலிபருக்கு தமிழ் பிளாக்கர்ஸ் மற்றும் பொதுமக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக்கொள்வவதோடு அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

Tuesday, January 27, 2009

இலங்கை - இந்திய அணி கிரிக்கெட் புறக்கணிப்போம்


இலங்கையில் போர் நடைபெற்று அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்து வருகிறது இலங்கை அரசு.இலங்கைக்கு இந்திய அணிகள் கிரிக்கெட் விளையாடச் செல்லக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் குரல் கொடுத்தனர். ஆனால் யாவும் பயனற்று போய்விட்டது. ஒரு(மூன்று) நாள் போட்டியில் கலந்து கொள்ள இலங்கைக்கு பயணமானது இந்தியஅணி. (இதேபோல்தான் கார்கில் யுத்தம் நடைபெற்றபோதும் பாகிஸ்தானுடன் விளையாடச் சென்றது) இந்தியர்களாகிய நாம் நம் எதிர்ப்பைக் காட்ட இந்தியா/ இலங்கை அணி விளையாட்டை தொலைக்காட்சியில் பார்ககாமல் புறக்கணிப்போம்.

Wednesday, January 21, 2009

வருவாயை விட்டுத்தருவாரா கருணாநிதி?


முன்னாள் முதல்வர்கள் கொண்டுவரும் திட்டங்களை அடுத்து ஆள வருபவர்கள் நிறுத்தி வைக்கவோ அல்லது கிடப்பிலேயே போடத்தான் விரும்புவார்கள். ஆனால் தற்போது முதல்வராக இருக்கும் கருணாநிதி அவர்கள், முன்னாள் முதல்வர் கொண்டுவந்த 'மதுபான கடைகளை அரசே ஏற்று நடத்தும்' என்ற கொள்கையை மட்டும் இவரும் ஏற்றறுக் கொண்டார். காரணம்? கொட்டும் வருமானம் கோடிக்கணக்கில் அல்லவா!
(இன்னும் சில 'தொழில்'கள் கூட இருக்கின்றன. அதையெல்லாம் விட்டு வைத்திருக்கிறார்களே என்று ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டும்.)
திடீரென 'ஞானதோயம்' வ்நத ராமதாஸ் அவர்கள் 'பூரண மதுவிலக்கு' கொள்கையை உயர்த்திப்பிடித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இதற்காக முதல்வரை அடிக்கடி சந்தி்த்தும் வருகிறார்.
இந்நிலையில் 'கள்' இறக்க அனுமதி வேண்டி விவசாயிகள் போராட ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு சரத்குமாரின் ச.ம.க. உட்பல சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அடிக்கடி 'உள்ளேன் அய்யா' என என்ட்ரி கொடுக்கும் காங்கிரஸ் கட்சியினர் 'கள்' இறக்கும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். முழு மதுவிலக்கு காங்கிரஸ் அடிப்படை கொள்கை. எனவே இதை ஒருபோதும் அனுமதிக்காது. இதற்காக நாங்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் அல்ல, அவர்களுக்காக விவசாய கடனை மத்திய அரசும், மாநில அரசும் தள்ளுபடி செய்துள்ளது. விவசாயிகள் 'கள் ' இறக்குவதை தவிர்த்து, பதநீர் உற்பத்தியை பெருக்கலாம். இதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக "காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் 'பூரண மதுவலிலக்கு' இல்லை" என்கிறார் கருணாநிதி.விவசாயிகளுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியும் போராட்டத்தில் குதித்துள்ளது.
இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

Friday, January 16, 2009

இலங்கைத் தமிழரின் இன்னல் நிலைப்பாடும், எதிர்பார்ப்புகளும்.







இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டி திருமாவளவன் செங்கல்பட்டு அருகே இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முதல்வர் கலைஞர் கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே ஈழத்தமிழர் பிரச்சினையில் தனது பங்களிப்பு பற்றி கூறி, திருமாவளவன் அவசரப்பட்டு தன்னிச்சையாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்றும் இந்திய அரசின் போக்கினை இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து பார்போம். அதன்பிறகு என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார். கொழும்பு சென்றுள்ள சிவசங்கரமேனன் பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகிறார். ராஜபக்சேவை இனிதான் சந்திக்க இருக்கிறார். என்ன முடிவு ஏற்படும் என்பதை அறிய உலகமே காத்திருக்கிறது. ஈழத்தில் நடைபெறும் போரின் உக்கிரத்தை காட்டும் சில படங்கள்.... உங்கள் பார்வைக்கு!



Wednesday, January 14, 2009

இலங்கைப்பிரச்சனை இ(எ)ன்று தீரும்?


இலங்கையில் இன்றளவும் குண்டுகள் சத்தமும், ஈழத்தமிழர்களி்ன் அழுகுரலும் ஓயவில்லை. அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள ஒரு சில கட்சிகள் தவிர அனைத்து கட்சிகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தாலும்,உரத்து குரல் கொடுத்தாலும் போர் ஓயவில்லை. தமிழக முதல்வரும் எம்.பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என்று அறிக்கை வி்ட்டார்.மனித சங்கிலி போராட்டம், சாலை மறியல், இரயில் மறியல், அடையாள உண்ணாவிரதம் போராட்டம் என்று எவ்வளவோ செய்து பார்த்தாயிற்று. மத்திய அரசு ராணுவ உதவி அளிக்கக்கூடாது என்றும், போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து அரசியல் இயங்கங்களும் உரத்து குரல் கொடுத்து வருகிறார்கள். திரைத்துறையினரும் போராட்டக்களத்தில் குதித்து தன் ஆதரவை தெரிவித்ததை நாடு அறியும். உலகமே வியக்கும் வண்ணம் தமிழர்களின் குரல் ஓங்கி ஒலித்தாலும் மத்திய அரசு அவசர கதியில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே உண்மை. சென்னை வந்த இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சம்பந்தன் அவர்கள் கூறும் போது ''4 லட்சம் தமிழர்கள் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் இதே நிலை நீடித்தால் 5 ஆண்டுகளில் தமிழர்கள் யாரும் அங்கு இருக்க மாட்டார்கள். அதைத்தான் இலங்கை அரசு விரும்புகிறது''. என்கிறார். திருமாவளவன், கீ.வீரமணி, டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் சமீபத்தில் கலைஞரை சந்தி்த்து மீண்டும் மத்திய அரசை வற்புறுத்த வேண்டி சந்தித்தார்கள்.பாராளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழர் பிரச்சனை எதிரொலிக்கும் என்று திருமாவளவன் கூறினார். சந்திப்பிற்கு பிறகு கலைஞர் பிரதமரிடம் மீண்டும் எடுத்துரைப்பேன். நம்மால் போரை நிறுத்த முயன்றால் நமக்கு பெருமைதான் என்றார்.மத்திய அரசு இதோ இதோ என்று போக்கு காட்டி வந்தது. இன்று(15.1.2009) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிவசங்கரமேனன் கொழும்பு செல்கிறார். இலங்கையில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்தித்து போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக செயத்திகள் வெளியாகியுள்ளன. தமிழர் புத்தாண்டு பிறந்துள்ள இந்நன்னாளில் ஈழத்தமிழரின் வாழ்விலும் மகி்ழ்ச்சி நிலவ வேண்டும் என்பதே நம் ஆவல்.

Wednesday, January 7, 2009

லாரிகள் வேலை நிறுத்தத்தால் யாருக்கு பாதிப்பு?


லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் பாதிப்பு லாரி உரிமையாளர்களும், மத்திய அரசுக்கும் மட்டுமா? இல்லையே... தென்னை மரத்தில தேள் கொட்டினால் பனை மரத்திலேயா அண்டகட்டும் என்பது முதுமொழி. ஆனால் இன்றைய நாளில் அந்த பொன்மொழி பொய்யாகிப் போனது. (இந்தப் பொன்மொழிக்கு வேறு அர்த்தம் உண்டா என்று தெரிந்தவர்கள் சொன்னால் ஏற்றுக் கொள்ளப்படும்.) லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் அரசுக்கும் , லாரி உரிமையாளர்களுக்கும் வருவாய் இழப்பு என்றால் அவர்கள் இருவரும் பேசித்தீர்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடலாம். தமிழ்நாட்டில் சுமார் 4000 லாரிகள் ஓடுவதாக ஒரு உத்தேச கணக்கு சொல்கிறது. ஒரு லாரிக்கு இரண்டு பேர் என்றால் சுமார் எட்டாயிரம் தொழிலாளிகள் மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளிகள், சுமைதூக்கும் தொழிலாளிகள் மற்றும் லாரி போக்குவரத்தை நம்பியுள்ள விவசாயிகள், வணிகர்கள், இவர்களை நம்பியுள்ள பொதுமக்கள் என்று பட்டியல் நீள்கிறது. பாதிப்புகளில் சில...திருப்பூரில் உற்பத்திசெய்த பனியன்கள் தேக்கம்.நாமக்கல் மாவட்டங்களில் முட்டைகள் தேக்கம்.பொங்கல் நெருங்கி வரும் வேளையில் பரமக்குடியில் வெல்லம் தேக்கம்.காய்கறிகள் வரத்து பாதிப்பு.இந்நிலையில் நாளைமுதல் பால், தண்ணீர் லாரிகளும் ஓடாது என்று அறிவிப்பால் எவ்வளவு பாதிப்புகள் நேரும் என்று நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. (தஞ்சை மாவட்டங்களில் மட்டும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை. பொங்கல் திருவிழா நெருங்கி வருவதால் விவசாயிகளை மனதில் கொண்டு லாரிகளை இயக்குவதாக அவர்கள் கூறியிள்ளனர்.) பெட்ரோல் விலையை மட்டும் நள்ளிரவு முதலே உயர்த்தும் மத்திய அரசு டாலருக்கு நிகரான மதிப்பு குறைந்து வரும் வேளையில் உடனடி நடவடிக்கை எடுத்தால்தான் மக்களின் நன்மதிப்பை பெற முடியும். இல்லையென்றால் மக்களின் மௌனம் தேர்த-ல் எதிரொ-க்கும் என்பது வரலாறு மறுக்கமுடியாத உண்மை.பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்றும், சமையல் எரிவாயு விலை ரூபாய் 25 முதல் 30 வரை குறைக்கப்படும் என்றும் கூறிய பெட்ரோ-யத்துறை அமைச்சர், லாரி உரிமையாளர்களை சிலர் தவறாக வழிநடத்துகின்றனர் என்கிறார். எது எப்படியோ விரைவில் ஒரு சுமூகமான தீர்வு எட்டவேண்டும். அதுவே நாட்டுக்கும் நல்லது அரசுக்கும் நல்லது.

Monday, January 5, 2009

திருமங்கலம் இடைத்தேர்தல்


திருமங்கலம் இடைத்தேர்தல் வந்தாலும் வந்தது,அரசியல் கட்சிகள் அனைத்தும் சுறுசுறுப்பாகிவிட்டன. மக்களுக்கும் திரும்பிய இடமெங்கும் பலத்த வரவேற்பு. திருமங்கலத்தில் நடப்பவற்றை பார்த்தால், வாக்காளர்கள் கொடுத்துவைத்தவர்களா... அல்லது பாவப்பட்டவர்களா என்பதே புரியவில்லை. தி.மு.க.மீது அ.தி.மு.கவும், அ.தி.மு.க.மீது தி.மு.க.வும் மாறி மாறி பழியைச் சொல்கிறார்கள். மற்ற கட்சிகளும் ஒழுங்கா என்று கேட்காதீர்கள். மக்களாகிய உங்களுக்குத் தெரியாததா! இடைத் தேர்தலை சீக்கிரமாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன? ஏதோ அரசியல் சதி என்றளவுக்கு தி.மு.க. முதலில் அறிக்கை விட்டது. ஜெயலிதாவோ தேர்தலில் தோற்றுப்போவோம் என்ற பயத்தில் கருணாநிதி உளறுகிறார் என்றார். அதன்பிறகு தேர்தலை தடுக்க எதிர்கட்சிகள் என்ன தொந்தரவுகள் கொடுத்தாலும் தி.மு.க.வினர் கையைகட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற அளவிற்கு கருணாநிதி பேசினார்.இப்போது தி.மு.க., அ.தி.மு.க. இருவரும் பணத்தை வாரி இறைப்பதாக ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டை கூறிவருகின்றனர். அந்தந்த கட்சிக்கு சார்பாக அவர்களின் சொந்த மீடியாவும் உழைக்கின்றன. இந்த நிலையில் பா.ம.க. யாருக்கும் அதரவு கொடுக்காமல் நடுநிலை வகிப்பதாக அறிவித்துள்ளது. (ஜெயிக்கும் கட்சியுடன் நாடாளுமன்றக் கூட்டணி வருமோ!)தே.மு.தி.கவும் களத்தில் போராடி வருகிறது. கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலை சந்திக்கும் கட்சியாக சமத்துவ மக்கள் கட்சி தேர்தலை சந்திக்கிறது.தி.மு.க.கூட்டணியில் இதுவரை இருந்த இரு கம்யூனிஸ்ட்டுகளும் அ.தி.மு.க.விற்காக வாக்கு சேகரித்து வருகின்றன.முதன்முறையாக அழகிரியும், மு.க.ஸ்டாலினும் இணைந்தும் தேர்தலை சந்திக்கின்றனர். மீண்டும் தயாநித மாறன் தி.மு.க. கூடாரத்திற்குள் நுழைந்திருக்கிறார். பொங்கல் பரிசாக திருமங்கல மக்கள் தரும் வாக்கை வெல்லப்போவது யார்? பொறுத்திருங்கள்...