Thursday, August 13, 2009

சுதந்திரக் கனவுகள்...



ஒரு
ஆகஸ்ட் 15-ல்
வெள்ளை இருட்டுகள்
வெளியேறிய பின்

இருநூறு ஆண்டுகளாய்
அடிமைப்புழுதியில்
அழுந்திக் கிடந்த
எங்கள் சுயச்சூரியனை
தூசு தட்டி
ஜனநாயக சட்டை
அணிவித்தோம்

என்னாயிற்று?

ஆயிரமாயிரம்
முன்னோர்களின்
குருதியில் பூத்த
சுதந்திரச் சோலைக்குள்
இன்று
கொரில்லாக்கள் அல்லவா
குடிபுகுந்தன

அரசியல் சிற்பிகளிடம்
செதுக்கச் சொல்லித்தானே
உளி கொடுத்தோம்
சிம்மாசனத்தில் அமர்ந்து
பாரதத்தை
சிதைக்கச் சொன்னது யார்?

இடியாய் விழும்
அரசியல் அடியில்
வலி பொறுக்காத தேசம்
பாஞ்சாலியாய் கதறுகையில்
கை கொடுப்பதாய் வந்த
கண்ணபிரான்களோ
துச்சாதனனுக்கு அல்லவா
துணைபோயினர்?

எல்லோரும் பசியாறத்தான்
சமைக்கப்பட்டது
ஆனால்
சுதந்திரச் சோறு
பரிமாறப்படுவதோ
பணக்காரர்களின் பந்தியில் மட்டுமே

சிதறும் சில
பருக்கைகளும்
சில்லரைக்கே விநியோகம்

பசிக்காய் அழுது... அழுது...
பசி மறந்த பிறகுதான்
இங்கே
கூழ்காய்ச்சவே
திட்டமிடுகிறார்கள்

அழுத குழந்தைகளுக்காய்
ஆப்பம் வாங்கப் போனவர்களின்
ஏப்பச் சத்தத்தில்
எங்கள்
காது பிளக்கிறது

ஆனாலும் இவர்கள்
நன்றி மறக்காதவர்கள்
அதனால்தான்
ஆண்டுகள் ஐந்திற்கு
ஒருமுறையேனும்
எங்கள் வாசலுக்கு
வணக்கம் போட வருகிறார்கள்.

நாங்கள்கூட
புத்திசாலிகள்தாம்

ஆனாலும்
வாக்குறுதி விளக்கில்
விட்டில்களாய் அல்லவா
விழுந்துவிடுகிறோம்.

என்ன செய்வது?

கடிக்கும் என்று தெரிந்தும்
நாய்கள் வளர்ப்பது
எங்கள் நாகரீகமாயிற்றே

- கோ. பாரதிமோகன்.

13 comments:

ஊர்சுற்றி said...

நல்ல வெளிப்பாடு. இந்தக் கோபம் நம் எல்லோருக்கும் தேவையானதுகூட.

ஈரோடு கதிர் said...

நியாயமான கோபமே

ப்ரியமுடன் வசந்த் said...

//கடிக்கும் என்று தெரிந்தும்
நாய்கள் வளர்ப்பது
எங்கள் நாகரீகமாயிற்றே//

அதுவும் நன்றியில்லாத நாய்களையல்லவா வளர்க்கிறோம்.?

அ.மு.செய்யது said...

முகத்தில் அறையும் வரிகளால் நிறைந்திருக்கிறது சுதந்திரக் கவிதை.

பாரதி மோகனுக்கு வாழ்த்துக்கள்.பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள் !!!

sakthi said...

அருமையான கவிதை

சவுக்கடி

sakthi said...

இடியாய் விழும்
அரசியல் அடியில்
வலி பொறுக்காத தேசம்
பாஞ்சாலியாய் கதறுகையில்
கை கொடுப்பதாய் வந்த
கண்ணபிரான்களோ
துச்சாதனனுக்கு அல்லவா
துணைபோயினர்?

வலியுடன் கூடிய வரிகள்

sakthi said...

பகிர்வுக்கு நன்றி அன்பு அண்ணா

ஆ.ஞானசேகரன் said...

நல்ல உணவுகளை கொட்டியுள்ளீர்கள் தலைவா... வாழ்த்துகள்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நன்று!

சி.கருணாகரசு said...

எல்லோரும் பசியாறத்தான்
சமைக்கப்பட்டது
ஆனால்
சுதந்திரச் சோறு
பரிமாறப்படுவதோ
பணக்காரர்களின் பந்தியில் மட்டுமே///

நல்லா இருக்கு கவிதையும் ...உணர்வும்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

nalla pakirvu anpumani!

"உழவன்" "Uzhavan" said...

சான்சே இல்ல.. மிக மிக அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

கோபம் சரிதான்.. எனினும் இந்த போராட்ட குணம் பலருக்கும் (நான் உட்பட) வெறும் கவிதை எழுத மட்டுமே உபயோகப்படுவது என்பது பரிதாபம்.