Wednesday, January 14, 2009

இலங்கைப்பிரச்சனை இ(எ)ன்று தீரும்?


இலங்கையில் இன்றளவும் குண்டுகள் சத்தமும், ஈழத்தமிழர்களி்ன் அழுகுரலும் ஓயவில்லை. அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள ஒரு சில கட்சிகள் தவிர அனைத்து கட்சிகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தாலும்,உரத்து குரல் கொடுத்தாலும் போர் ஓயவில்லை. தமிழக முதல்வரும் எம்.பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என்று அறிக்கை வி்ட்டார்.மனித சங்கிலி போராட்டம், சாலை மறியல், இரயில் மறியல், அடையாள உண்ணாவிரதம் போராட்டம் என்று எவ்வளவோ செய்து பார்த்தாயிற்று. மத்திய அரசு ராணுவ உதவி அளிக்கக்கூடாது என்றும், போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து அரசியல் இயங்கங்களும் உரத்து குரல் கொடுத்து வருகிறார்கள். திரைத்துறையினரும் போராட்டக்களத்தில் குதித்து தன் ஆதரவை தெரிவித்ததை நாடு அறியும். உலகமே வியக்கும் வண்ணம் தமிழர்களின் குரல் ஓங்கி ஒலித்தாலும் மத்திய அரசு அவசர கதியில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே உண்மை. சென்னை வந்த இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சம்பந்தன் அவர்கள் கூறும் போது ''4 லட்சம் தமிழர்கள் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் இதே நிலை நீடித்தால் 5 ஆண்டுகளில் தமிழர்கள் யாரும் அங்கு இருக்க மாட்டார்கள். அதைத்தான் இலங்கை அரசு விரும்புகிறது''. என்கிறார். திருமாவளவன், கீ.வீரமணி, டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் சமீபத்தில் கலைஞரை சந்தி்த்து மீண்டும் மத்திய அரசை வற்புறுத்த வேண்டி சந்தித்தார்கள்.பாராளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழர் பிரச்சனை எதிரொலிக்கும் என்று திருமாவளவன் கூறினார். சந்திப்பிற்கு பிறகு கலைஞர் பிரதமரிடம் மீண்டும் எடுத்துரைப்பேன். நம்மால் போரை நிறுத்த முயன்றால் நமக்கு பெருமைதான் என்றார்.மத்திய அரசு இதோ இதோ என்று போக்கு காட்டி வந்தது. இன்று(15.1.2009) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிவசங்கரமேனன் கொழும்பு செல்கிறார். இலங்கையில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்தித்து போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக செயத்திகள் வெளியாகியுள்ளன. தமிழர் புத்தாண்டு பிறந்துள்ள இந்நன்னாளில் ஈழத்தமிழரின் வாழ்விலும் மகி்ழ்ச்சி நிலவ வேண்டும் என்பதே நம் ஆவல்.

No comments: